Advertisement

செங்கல்பட்டு: பசுந்தாள் உர பயிர்கள் மூலம் மண் வளம் அதிகரிக்க அழைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரி சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விவசாய நிலங்களின் மண் வளத்தை பாதுகாக்கவும், அதிகரிக்கவும் பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று வேளாண்துறை விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பிரேம் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.

அறிக்கையில், கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் நிலத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சணப்பை, தக்கைப் பூண்டு போன்ற பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் நிலத்தின் இயற்கை வளம் அதிகரித்து, மண் ஆரோக்கியம் மேம்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உர உற்பத்தி செலவுகள் அதிகரித்தாலும், யூரியா உள்ளிட்ட உரங்கள் விவசாயிகளுக்கு சலுகை விலையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், விவசாயிகள் உரங்களை தேவையான அளவிலேயே சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, நெல் தாளடி மக்க வைப்பதற்கும், களைகொல்லி பயன்படுத்துவதற்கும் யூரியாவை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக டி-கம்போசர் பயன்படுத்துதல், மண் அல்லது ஜிப்சம் கலந்து களைகொல்லி இடுதல் போன்ற மாற்று முறைகளை பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், வேளாண் பல்கலைக்கழக பரிந்துரைகள் மற்றும் மண் பரிசோதனை அடிப்படையில், ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஒன்றரை முதல் இரண்டு மூட்டை உரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண் வளத்தை பாதுகாக்க இயற்கை சார்ந்த சாகுபடி முறைகளை அதிகப்படியாக பின்பற்ற வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு வேளாண்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement