செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் பக்கா ஜென்டில்மேன் போல மாடர்ன் உடையில் வலம் வந்து, நோயாளிகளின் உறவினர்களிடம் திருட முயன்ற போதை ஆசாமி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக மடக்கிப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மட்டுமல்லாமல் மதுராந்தகம், செய்யூர், திண்டிவனம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள பிரசவ வார்டு பகுதியில் டிப்டாப் உடைகளை அணிந்து கொண்டு நபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நீண்ட நேரமாகச் சுற்றித் திரிந்துள்ளார்.
பார்ப்பதற்கு நல்ல நடுத்தர குடும்பத்து நபர் போல தோற்றமளித்ததால் ஆரம்பத்தில் யாரும் அவரை சந்தேகிக்கவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் போதை ஆசாமி, சமயம் பார்த்துப் பிரசவ வார்டுக்கு வெளியே படுத்திருந்த உறவினர்களின் உடைமைகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து திருட முயன்றபோது, அங்கிருந்த விழிப்புணர்வுமிக்க பொதுமக்கள் அவரை கையும் களவுமாக லாக் செய்தனர்.
பொதுமக்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு தர்ம அடி கொடுக்கத் தொடங்கியதும், தப்பிக்க வழியில்லை என்பதை உணர்ந்த அந்த ஆசாமி, உடனடியாக எமோஷனல் கார்டை கையில் எடுத்துப் பிக்பாஸ் ரேஞ்சுக்கு நடிக்கத் தொடங்கினார். “ஐயா எனக்கு அம்மா, அப்பா யாரும் கிடையாது, நான் ஒரு அனாதை; பசியில தெரியாம செஞ்சிட்டேன், என்னை மன்னிச்சு விட்ருங்க” என்று பொதுமக்கள் காலில் விழுந்து கண்ணீர் மல்கக் கெஞ்சி நாடகமாடத் தொடங்கினான். ஆனால், அவனது பேச்சில் இருந்த தடுமாற்றத்தைக் கவனித்த பொதுமக்கள், அவன் கடுமையான போதையில் இருப்பதைக் கண்டறிந்து செங்கல்பட்டு நகரக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
லோக்கல் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவன் சென்னை திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தாஜுதீன் (30) என்பதும், அம்பத்தூரில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. திருடர்கள் தங்களைப் பொதுமக்களிடமிருந்து காத்துக்கொள்ள புதிய புதிய வேடங்களையும் உருக்கமான நாடகங்களையும் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளதால், வெளிப்புறத் தோற்றத்தை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.












