செங்கல்பட்டு அருகே அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 12 மாணவர்களில் ஒருவரை, 3 தனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார் கைது செய்துள்ளனர்.
📍 செங்கல்பட்டு அருகே செயல்பட்டு வரும் அரசு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 12 மாணவர்கள் தப்பிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினர். வெளியே வந்த அவர்கள், வழியில் சென்ற பொதுமக்களிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🚔 இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் (எஸ்.பி.) உத்தரவின்பேரில், தப்பிச் சென்ற மாணவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
🔎 இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தப்பிச் சென்ற மாணவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவத்தை அடுத்து செங்கல்பட்டு அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் வீரப்பன் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த அறிவுறுத்தினார்.












