மாமல்லபுரம், பொத்தேரி, காட்டாங்கொளத்தூரில் நிகழ்ந்த மூன்று தனித்தனி சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர்.
⚡ மாமல்லபுரத்தில் மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பயன்படுத்தப்பட்ட இரும்பு பைப் அருகில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் பாஷா (45), ராஜேந்திரன் (55), பிரபு (40), பாலாஜி (45) ஆகிய நான்கு தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
🏨 பொத்தேரி விடுதியில் இளைஞர் உயிரிழப்பு
பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் உணவு பரிமாறும் பணியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தேபாசிஸ் மண்டல் (24), விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். தகவலறிந்த மறைமலைநகர் போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
🚑 காட்டாங்கொளத்தூரில் ஆம்புலன்ஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி
காட்டாங்கொளத்தூரில் ஜி.எஸ்.டி. சாலையை மொபட்டில் கடக்க முயன்ற தெற்கு ரயில்வே ஊழியர் சனாவுல்லா (52) மீது அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியது. பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












