செங்கல்பட்டு புறவழிச்சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து: செங்கல்பட்டு புறவழிச்சாலையில் புலிப்பாக்கம் பகுதியில் இரண்டு கனரக லாரிகள் மோதிக்கொண்ட விபத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 3 டன் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. செங்கல்பட்டு புறவழிச்சாலையில் புலிப்பாக்கம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கனரக லாரி மீது எதிர்பாராதவிதமாக தேங்காய் ஏற்றி வந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் தேங்காய் ஏற்றி வந்த லாரியின் முன்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. லாரியை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (33) சிறு காயமும் இன்றி உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய இரு லாரிகளையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.
விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#செங்கல்பட்டு #புறவழிச்சாலை #லாரிவிபத்து #புலிப்பாக்கம் #சாலைவிபத்து #போக்குவரத்துநெரிசல் #தேசியநெடுஞ்சாலை #Chengalpattu #LorryAccident #TrafficUpdate #ChengalpattuNews













