Advertisement

அக்கா வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு – மாமாவை வெட்டிய ரவுடி கைது

செங்கல்பட்டு அருகே ஆத்தூரில் நிலத்தகராறு காரணமாக அக்கா வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதுடன், தடுக்க வந்த மாமாவை கத்தியால் வெட்டிய பிரபல ரவுடியை செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்தனர். குடியிருப்பு பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் அண்ணாநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் இன்பா (37). இவரது தம்பி பார்த்திபன் (30). கடந்த 2020-ஆம் ஆண்டு பார்த்திபனிடமிருந்து ரூ.1.05 லட்சம் கொடுத்து இன்பா ஒரு நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நிலப் பத்திரத்தில் தனது மனைவி கையெழுத்திடவில்லை என்றும், அந்த நிலத்தில் தனக்கும் பங்கு இருப்பதாகவும் கூறி பார்த்திபன் தொடர்ந்து அக்கா இன்பாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

Advertisement

இந்நிலையில், தகராறு முற்றிய நிலையில் பார்த்திபன் தனது நண்பர்கள் இருவருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து, அக்கா இன்பா மற்றும் அவரது தாயாரின் வீடுகளின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. வெடிகுண்டுகள் வெடித்ததில் பயங்கர சத்தம் ஏற்பட்டதுடன், வீடுகளின் முன்பகுதி, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

வெடிசத்தம் கேட்டு வெளியே வந்து தாக்குதலை தடுக்க முயன்ற இன்பாவின் மாமா மனோஜ் (55) என்பவரை பார்த்திபன் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இன்பாவின் வீட்டு கதவையும் சேதப்படுத்திவிட்டு பார்த்திபன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

Advertisement

கத்திக்குத்தில் காயமடைந்த மனோஜை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிதறிக் கிடந்த வெடிகுண்டு பாகங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், பிரபல ரவுடியான பார்த்திபனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

போலீசாரின் தகவலின்படி, பார்த்திபன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்ததாகவும், காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மனோஜ் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பார்த்திபனின் நண்பர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீச்சும், கத்திக்குத்து தாக்குதலும் நடந்துள்ளதால் ஆத்தூர் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.

#செங்கல்பட்டு #ஆத்தூர் #நாட்டு_வெடிகுண்டு #வெடிகுண்டு_வீச்சு #ரவுடி #ரவுடி_கைது #கத்திக்குத்து #நிலத்தகராறு #காவல்துறை #தமிழ்நாடு_செய்திகள்

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement