செங்கல்பட்டு அருகே அரசு பாதுகாப்பு நிலையத்தில் காவலாளியை தாக்கி நுழைவாயில் சாவியை பறித்துக் கொண்டு 12 சிறுவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📍செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பழத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பாதுகாப்பு நிலையத்தில் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 18 வயதுக்குட்பட்ட 30-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயங்கி வரும் இந்த நிலையத்தில் நேற்று (ஜூலை 12) இரவு எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது.
🚔 இரவு நேரத்தில் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்காக சென்ற காவலாளியை 12 சிறுவர்கள் கொண்ட குழு திடீரென தாக்கியுள்ளனர். தாக்குதலின் போது அவரது கையில் இருந்த நுழைவாயில் சாவியை பறித்துக் கொண்ட அவர்கள், பாதுகாப்பு நிலையத்தின் நுழைவாயிலை திறந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் காவலாளி காயமடைந்துள்ளார்.
🔎 தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். தப்பிச் சென்ற 12 சிறுவர்களை கண்டுபிடிக்க பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு நிலையத்தில் இருந்து சிறுவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












