இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட வலிமையான இந்திய அணியைப் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளம் நட்சத்திரம் சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15-இல் காலியிலும், 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23-இல் கொழும்பிலும் தொடங்குகின்றன.
இத்தொடருக்கான இந்திய அணியில், காயம் காரணமாகப் சில காலம் ஓய்விலிருந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பூரண குணமடைந்து மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பேட்டர் சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர்களின் உடற்தகுதி சான்றிதழ் (Fitness Clearance) அடிப்படையில் அவர்கள் விளையாடுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்பதால், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சரண்ஷ் ஜெயின் முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பைப் பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரெல் ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின்.











