Advertisement

பரிசீலனையில் அண்ணாமலை ராஜினாமா கடிதம்… செங்கல்பட்டில் ஆதரவாளர்கள் பட்டாசு வெடிப்பு

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகுவதற்காக ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், செங்கல்பட்டு பகுதியில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார்.

Advertisement

அவரது தலைமையில் “என் மண், என் மக்கள்” யாத்திரை, திமுக அரசுக்கு எதிரான தொடர் பிரசாரங்கள் மற்றும் பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதாக கட்சியினர் கருதுகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து தனித்து போட்டியிட்ட பாஜக, 11 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்ட விவகாரம் மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் டெல்லியில் பாஜக தேசிய தலைமை நிர்வாகிகளை சந்தித்து தனது முடிவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும், தேசியத் தலைவர் நிதின் நபினிடம் ஐந்து பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாகவும், மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனும் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், அண்ணாமலையின் அரசியல் முடிவை வரவேற்கும் வகையில் செங்கல்பட்டு பகுதியில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர்.தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்படுமா அல்லது அவர் தொடர்ந்து பாஜகவில் நீடிப்பாரா என்பது குறித்து தேசியத் தலைமையின் முடிவுக்காக அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement