Advertisement

ஆலத்தூரில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்.. சிசிடிவி கேமரா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் பகுதியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருவதால், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலத்தூர் ஊராட்சியில் 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், 1982ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டை இப்பகுதியின் முக்கிய தொழில் மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு இயங்கி வரும் 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Advertisement

இந்த தொழிற்சாலைகள் மற்றும் ஓ.எம்.ஆர் சாலை பேருந்து நிறுத்தத்திற்கிடையே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் உள்ளதால், வேலை முடித்து செல்லும் தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் இரவு பணி முடித்து செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆலத்தூர் குடியிருப்பு பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வாடகை வீடுகளில் தங்கி வருவதால், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisement

இரவு நேரங்களில் வெளிநபர்கள் மது அருந்துவது, வாகன விபத்துகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது போன்ற காரணங்களால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே முக்கிய சாலைகள், தொழிற்சாலை பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீஸ் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement