Advertisement

அச்சிறுப்பாக்கம் அருகே 5 இருளர் குடிசைகள் தீயில் நாசம்.. நிவாரண உதவி வழங்கல்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே அம்மணம்பாக்கம் ஊராட்சியில் உள்ள இருளர் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் திடீரென ஒரு குடிசை வீட்டில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ வேகமாக அடுத்தடுத்த குடிசை வீடுகளுக்கும் பரவியது. சில நிமிடங்களில் ஐந்து குடிசை வீடுகளும் கொழுந்துவிட்டு எரிந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், 5 வீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த துணிமணிகள், பாத்திரங்கள், பணம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து செய்யூர் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி, மளிகைப் பொருட்கள், தார்பாய், படுக்கை விரிப்புகள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement

இந்த தீ விபத்தில் வீடுகளை இழந்த இருளர் குடும்பங்களுக்கு அரசு நிரந்தர உதவி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement