Advertisement

அச்சிறுபாக்கம் நடைமேம்பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்

அச்சிறுபாக்கத்தில் உள்ள பயன்பாடற்ற இரும்பு நடைமேம்பாலம் சேதமடைந்து துருப்பிடித்த நிலையில் இருப்பதால், அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அச்சிறுபாக்கத்தில் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனைத் தடுக்கும் நோக்கில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நடைமேம்பாலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவியாக இருந்தது.

ஆனால், 2022-ம் ஆண்டு ஏற்பட்ட மாண்டஸ் புயலின்போது நடைமேம்பாலம் கடுமையாக சேதமடைந்தது. குறிப்பாக, மேம்பாலத்தின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஓடுகள் பிய்ந்து காற்றில் ஆபத்தான முறையில் ஊசலாடியதால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

Advertisement

இதையடுத்து, 2023-ம் ஆண்டு மேம்பாலத்தின் கூரையில் இருந்த பிளாஸ்டிக் ஓடுகள் அகற்றப்பட்டன. ஆனால், அதன் பிறகு இதுவரை புதிய கூரை அமைக்கப்படவில்லை. திறந்தவெளியில் இருக்கும் இரும்பு அமைப்புகள் மழை மற்றும் வெயிலால் துருப்பிடித்து பலவீனமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சேதமடைந்த பழைய நடைமேம்பாலத்தை அகற்றி, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய நடைமேம்பாலம் அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement