Advertisement

அச்சிறுபாக்கம் தேர் செல்லும் மாடவீதியில் ஆக்கிரமிப்புகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் உள்ள வடக்கு மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், கோவில் தேர் திருவிழா நடைபெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டுள்ளது. இதில் 7வது வார்டில் அமைந்துள்ள வடக்கு மாடவீதி, பிரசித்தி பெற்ற ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோத்சவ விழாவின் முக்கிய வழித்தடமாக உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்சவ விழாவின் போது, கோவில் தேர் இந்த மாடவீதியின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைவது வழக்கம்.

Advertisement

ஆனால், மாடவீதியில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால்வாய்களை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் மற்றும் வணிகக் கடைகளை கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சாலையின் அகலம் குறைந்து, தேர் இழுக்கும் பணிகளில் பக்தர்களும் கோவில் நிர்வாகத்தினரும் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினை குறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் லதா சமீபத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, தேர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் காவல்துறையின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

எனினும், இதுவரை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் வரவிருக்கும் கோவில் திருவிழாக்களில் மீண்டும் சிரமம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு, தேர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement