அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகையில் சாலையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆலமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📰 போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆலமரத்தை அகற்ற கோரிக்கை
📍செங்கல்பட்டு: அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் பழமையான எல்லையம்மன் கோவில் மற்றும் மலைமேல் முருகன் கோவில் அமைந்துள்ளன. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கார், வேன் மற்றும் பேருந்துகள் மூலம் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
🚍 கோவில் நுழைவாயிலுக்கு எதிரே உள்ள பழமையான ஆலமரம் சாலை வரை விரிந்து வளர்ந்துள்ளதால், போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சீதாபுரம், திம்மாபுரம், திருமுக்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையை மரக்கிளைகள் ஆக்கிரமித்துள்ளதால் பேருந்துகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்ல சிரமம் நிலவுகிறது. விபத்துகளை தவிர்க்கும் வகையில், இரண்டு மாதங்களுக்கு முன்பே எல்லையம்மன் கோவில் வழியாக பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
⚠️ இதனால் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆலமரத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












