அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
📍செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் சில பகுதிகளில் கான்கிரீட் மூடிகள் பொருத்தப்பட்டிருந்தாலும், பல இடங்களில் மூடிகள் இல்லாமல் திறந்த நிலையிலேயே காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த வழியாகச் செல்லும் மக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
🚶 குறிப்பாக இரவு நேரங்களில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாத காரணத்தால், நடைபயணிகள் திறந்த கால்வாயை கவனிக்காமல் தவறி விழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், சாலையோரமாகச் செல்லும் கால்நடைகளும் கால்வாயில் விழும் அபாயம் நீடிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் இந்த ஆபத்து மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
🚧 எனவே, திறந்த நிலையில் உள்ள அனைத்து கால்வாய் பகுதிகளுக்கும் பாதுகாப்பு மூடிகள் அமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












