Advertisement

மாமல்லபுரம்: ₹10 கோடியில் தொடங்கிய பணி பாதியில் நிறுத்தம்

மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க தொடங்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் நான்கு ஆண்டுகளாக முடங்கியிருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு, மாமல்லபுரம், பட்டிபுலம், சாலவான்குப்பம், கிருஷ்ணன்காரணை மற்றும் நெம்மேலி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மொத்தம் 1,054 ஏக்கர் நிலம் உள்ளது. குறிப்பாக சாலவான்குப்பம் முதல் வடநெம்மேலி வரை கிழக்கு கடற்கரை சாலைக்கும் கடற்கரைக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த நிலப்பகுதி பரவி உள்ளது.

Advertisement

இந்த பகுதியில் பல ஆண்டுகளாக சவுக்கு மரங்கள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் இந்த இடம் சமூக விரோத செயல்களுக்கு தளமாக மாறியதாக கூறப்படுகிறது. காதலர்கள் தங்கும் இடமாகவும், சில குற்றச் சம்பவங்கள் நடைபெறும் பகுதியாகவும் இது மாறியதால், நிலங்களை பாதுகாக்க அறக்கட்டளை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து சுமார் ₹10 கோடி மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டத்தின் கீழ் 3.5 அடி ஆழத்தில் கருங்கல் அடித்தளம் அமைத்து, அதன் மேல் 3 அடி உயர சுவர் மற்றும் அதற்கு மேலாக 4 அடி உயர கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டது.

Advertisement

ஆனால் தற்போது வரை கருங்கல் சுவர் மட்டும் கட்டப்பட்ட நிலையில், கம்பி தடுப்பு அமைக்கும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நிலப்பகுதி தொடர்ந்து திறந்தவெளியாகவே இருந்து வருகிறது. பல கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட திட்டம் முழுமை பெறாதது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement