வேலையில்லாதவருக்கு வேலை வழங்க வேண்டும்; வெறுமனே பணம் கொடுப்பது தீர்வாகாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் கோ.ஜானகிராமனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். மதுராந்தகம் இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் குறித்து பேசிய சீமான், ஏற்கெனவே ஒரு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பின்னர் அதே பதவிக்காக வேறு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவது நேரத்தையும், மக்களின் பணத்தையும் வீணடிக்கும் செயல் என விமர்சித்தார்.
கட்சி மாறியிருக்கிறது, ஆட்சி மாறியிருக்கிறது, ஆட்கள் மாறியிருக்கிறார்கள் என்றாலும் ஆட்சி முறை மாறவில்லை என்றும், அடிப்படையான ஆட்சி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம் என்றும் சீமான் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு பணப்பயன் அறிவிப்புகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், இதற்கான நிதி எங்கிருந்து பெறப்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றார். மூன்று சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பிலும் வருமான வரம்பு தொடர்பாக கேள்விகள் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கு பணம் வழங்குவதாக அறிவிப்பதற்குப் பதிலாக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திய சீமான், “வேலையில்லாதவனுக்கு வேலை தருபவன் தலைவன்; வேலையில்லாதவனுக்கு காசு கொடுப்பவன் தற்குறி” எனக் காட்டமாகப் பேசினார். மேலும், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
தனது பிரசாரத்தில் “விசிலை விடு; விவசாயத்தைத் தொடு” என்ற முழக்கத்தையும் முன்வைத்த சீமான், விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மின்வெட்டு தொடர்பாகவும் பேசிய அவர், சில பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலையில் மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக விமர்சித்தார்.
ஒரு சமூகத்தின் மாற்றம், முன்னேற்றம் மற்றும் மேம்பாடு கல்வியிலிருந்தே தொடங்க வேண்டும் எனக் கூறிய சீமான், கட்டணம் இல்லாமல் தரமான கல்வி வழங்க வேண்டும் என்றார். தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவம் வரை இலவசமாகவும் தரமாகவும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதாக விமர்சித்தார். அனைவருக்கும் இலவசமான மற்றும் சிறந்த மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.
தூய குடிநீர், நீர் வளப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து பேசிய சீமான், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் தேவை என்றும் தெரிவித்தார். வருங்கால தலைமுறைக்கு நல்ல குடிநீர், தூய காற்று மற்றும் நஞ்சில்லாத உணவு கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் கனவு என்றும் கூறினார்.
மேலும், மதுபானம் மற்றும் பொழுதுபோக்குக்காக மக்கள் பெருமளவில் பணம் செலவிடுவதாக குறிப்பிட்ட சீமான், அதே மக்களுக்கு அரசு இலவசங்களை வழங்க வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பினார். மது விற்பனை மற்றும் திரைப்பட வசூல் தொடர்பான சில தொகைகளையும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
எத்தனை முறை தோல்வி ஏற்பட்டாலும் தேர்தல் களத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், தொடர்ந்து மக்களுக்காக களத்தில் நிற்போம் என்றும் சீமான் தெரிவித்தார். உணவுப் பொருட்களை வாங்கும்போது பேரம் பேசும் நடைமுறை மாற வேண்டும் என்றும், விவசாயிகளின் உழைப்புக்கு உரிய மதிப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
#வேலையில்லாதவருக்குவேலை #சீமான் #மதுராந்தகம் #மதுராந்தகம்இடைத்தேர்தல் #நாம்தமிழர்கட்சி #ஜானகிராமன் #விசிலை_விடு_விவசாயத்தை_தொடு #விவசாயம் #நீர்மேலாண்மை #சுற்றுச்சூழல் #கல்வி #மருத்துவம் #குடிநீர் #Seeman #JobForUnemployed #Madurantakam #MadurantakamByElection #NTK #NaamTamilarKatchi #Janakiraman #Agriculture #WaterManagement #Environment #Education #Healthcare #DrinkingWater












