Advertisement

பொத்தேரி குடியிருப்பில் ஐபோன்கள் திருட்டு – உதிரிபாகங்களாக பிரித்து விற்றது அம்பலம்

பொத்தேரி குடியிருப்பில் ஐபோன்கள் திருட்டு தொடர்பாக 2 பேரை மறைமலைநகர் போலீசார் கைது செய்துள்ளனர். திருடப்பட்ட செல்போன்களை உதிரிபாகங்களாக பிரித்து விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் முருகன் (48) என்பவர் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். அதே குடியிருப்பில் தனது இரண்டு நண்பர்களுடன் தங்கியிருந்த அவர், வழக்கம்போல் இரவு தூங்கிவிட்டு அதிகாலையில் எழுந்தபோது, தங்களது 2 விலை உயர்ந்த ஐபோன்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertisement

இதுகுறித்து முருகன் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் ஜாம்ஷீட், பெருமாள், ராஜா ஆகிய காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோக் (32) என்பவர் செல்போன்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

மேலும், அசோக் திருடிய செல்போன்களை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த புஷ்பராஜ் (42) என்பவரிடம் விற்பனை செய்ததும், புஷ்பராஜ் அந்த செல்போன்களை உதிரிபாகங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து அசோக் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் போலீசார், அவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் விடுதிகளில் தூங்கச் செல்லும்போது கதவுகளை பூட்டி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு தூங்கக் கூடாது என்றும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

#பொத்தேரி #குடியிருப்பில்_ஐபோன்கள்_திருட்டு #ஐபோன்திருட்டு #செல்போன்திருட்டு #மறைமலைநகர் #போலீஸ் #திருட்டு #சிசிடிவி #உதிரிபாகங்கள் #கூடுவாஞ்சேரி #கைது #குற்றவிசாரணை #Potheri #iPhoneTheft #MobilePhoneTheft #MaraimalaiNagar #Police #CCTV #MobileParts #Guduvanchery #Arrest #CrimeInvestigation #Chengalpattu

Tags

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement