தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மதுராந்தகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களின் கைப்பேசிகளை கட்சி நிர்வாகிகள் பறித்து, மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.
மரகதம் குமரவேல் கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.கவில் இணைந்த நிலையில், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று அச்சிறுப்பாக்கம் அடுத்த தண்டராயப்பேட்டை பகுதியில் மரகதம் குமரவேல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த சில பொதுமக்கள் அவரை வழிமறித்து எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பொதுமக்களுக்கும் த.வெ.க நிர்வாகிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களின் கைப்பேசிகளை சில த.வெ.க நிர்வாகிகள் பறித்ததோடு, மிரட்டலும் விடுத்தனர்.
மேலும், “நாங்கள் வெற்றி பெற்ற பிறகு உங்களை பார்த்துக்கொள்வோம்” என்றும், “நாங்கள் நினைத்தால் தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலையே நிறுத்திவிடுவோம்” என்றும் ஒரு த.வெ.க நிர்வாகி பொதுமக்களை எச்சரித்தார்.
பொதுமக்களுக்கும் த.வெ.க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக தலையிடவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
#தவெகவேட்பாளருக்குஎதிர்ப்பு #மதுராந்தகம் #மதுராந்தகம்இடைத்தேர்தல் #மரகதம்குமரவேல் #தமிழகவெற்றிக்கழகம் #தவெக #பிரசாரம் #வாக்குசேகரிப்பு #தண்டராயப்பேட்டை #அச்சிறுப்பாக்கம் #செய்தியாளர்கள் #கைப்பேசிபறிப்பு #வாக்குவாதம் #பொதுமக்கள்எதிர்ப்பு #தேர்தல்பரபரப்பு #TVK #TamilagaVettriKazhagam #Madurantakam #MadurantakamByElection #MaragathamKumaravel #TVKCandidate #ElectionCampaign #VoteCollection #Thandaraiyapettai #Achirapakkam #Journalists #MobilePhone #PublicProtest #ElectionNews #TamilNaduPolitics #PoliticalNews #CampaignNews












