செங்கல்பட்டில் அதிரடி வேட்டை: அதிவேக வாகனங்கள் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வந்த நிலையில், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி முதல் படாளம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி முதல் படாளம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்பட்டதால் அடுத்தடுத்து தொடர் விபத்துகள் ஏற்பட்டன.
நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுப்பதுடன், வரம்பிற்கு மீறிய வேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின்போது, அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை கடந்து அதிவேகமாக வந்த வாகனங்களை அதிகாரிகள் நவீன கேமராக்கள் மூலம் துல்லியமாக கண்காணித்தனர். விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களை உடனடியாக மடக்கிப் பிடித்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மோட்டார் வாகன ஆய்வாளர் அமிதா பானு நேரடியாக களத்தில் இறங்கி, கேமரா மூலம் அதிவேகமாக சென்ற வாகனங்களைக் கண்காணித்து அபராதம் விதித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீதான கண்காணிப்பும் அபராத நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
#செங்கல்பட்டு #அதிவேக_வாகனங்கள் #வாகன_தணிக்கை #அபராதம் #பரனூர் #படாளம் #சாலை_விபத்து #தேசியநெடுஞ்சாலை #போக்குவரத்துத்துறை #சாலை_பாதுகாப்பு













