கருங்குழியில் விசிக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த தாக்குதலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளர் தேவமூர்த்தி பலத்த காயமடைந்தார்.
கருங்குழி 9-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளராக உள்ள தேவமூர்த்தி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஏற்பட்ட தகராறில், அதிமுக ஆதரவாளராக கூறப்படும் சரவணன், தேவமூர்த்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
சரவணன், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தின் நெருங்கிய ஆதரவாளர் எனவும் கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல்கள் தொடர்பாக போலீஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
அரிவாளால் தலையில் பலமாக வெட்டப்பட்டதில் தேவமூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த தேவமூர்த்தியின் புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன் மற்றும் அவரது தந்தை என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்த அரிவாள் வெட்டு சம்பவம் கருங்குழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#கருங்குழி #விசிகநிர்வாகி #அரிவாள்வெட்டு #தேவமூர்த்தி #தவெக #தவெகவிர்பாளர் #அதிமுக #மதுராந்தகம் #மதுராந்தகம்இடைத்தேர்தல் #செங்கல்பட்டு #காவல்துறை #கைது #Karunguzhi #VCKFunctionary #SickleAttack #Devamurthy #TVK #TVKCandidate #AIADMK #Madurantakam #MadurantakamByElection #Chengalpattu #Police #Arrest












