Advertisement

கட்சி கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலையா? – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கேள்வி!

கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டதற்கு லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். பகலும் இரவுமாகப் படித்து வரும் தகுதியான ஏழை எளிய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு வேலையை, ஒரு கட்சியின் கூட்டத்திற்குச் சென்று தவறான செயல்களால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு எப்படி வழங்க முடியும் என்றும், தேசத்தைக் காப்பாற்ற எல்லையில் நின்று போராடி உயிர்நீக்கும் ராணுவ வீரர்களுக்கே கிடைக்காத சலுகைகளை இவர்களுக்கு வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இலட்சிய ஜனநாயக கட்சியின் சார்பாகப் பொறுப்பாளர்கள் நியமன கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞரணி தலைவர் கிருஷ்ணா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் புதுவை சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளைக் கவனிக்காமல் பிற துறைகளில் தேவையின்றி தலையிட்டு ஆய்வு என்ற பெயரில் துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, காங்கிரஸிலிருந்து வந்து தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் விஸ்வநாதன், பொதுவெளியில் பாடல்களுக்கு நடனமாடி எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விவஸ்தை கூட இல்லாமல் செயல்படுவதாகச் சாடினார்.

Advertisement

மேலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலை செய்தாலும், அவருடன் இருப்பவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எப்படிச் சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் மட்டுமே செயல்படுகிறார்கள் என்று தெரிவித்தார். முன்பு மாற்றுக்கட்சிகளைத் தீய சக்தி என்று விமர்சித்தவர்கள், இன்று அதே கட்சிகளில் இருந்து வந்தவர்களைத் தமிழக வெற்றி கழகத்திற்குள் ஊடுருவ விட்டிருக்கிறார்கள் என்றும், இதனால் இவர்களால் நிஜமாகவே மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் கூறினார். தொழில்நுட்பம் மாற மாற நோக்கியாவிலிருந்து சாம்சங்கிற்கு மாறியது போலவும், சினிமாத்துறையில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், பிரதீப் ரங்கநாதன் என தலைமுறை மாறுவது போலவும் அரசியலிலும் மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், போதைப்பொருளை ஒழிக்க அண்ணாமலை நடத்தும் மாநாட்டை ஒரு நல்ல முடிவு என்பதால் லட்சிய ஜனநாயக கட்சி வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

 

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement