Advertisement

“வழங்கிய அரசுப் பணியைப் பறிக்கக் கூடாது!” – தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வீரபாண்டியன் வலியுறுத்தல்!

நெரிசல் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியைத் தமிழக அரசு திரும்பப் பெறக் கூடாது என்றும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ஏற்றுப் பணிகளைப் பறிப்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் செய்யும் பெரும் அநீதி என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியுடன் சேர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழக அரசின் சார்பில் கருணை அடிப்படையில் அரசுப் பணிகள் வழங்கப்பட்டன. இருப்பினும், இத்தகைய நியமனங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி அந்த அரசுப் பணி நியமன செல்லாது என்றும், அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்துக் கவலைத் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் துயரச் சம்பவத்தில் தங்கள் குடும்பத்தின் முதன்மை வாழ்வாதார இழந்து தவிக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு அரசு வழங்கியப் பணி நியமனம் ஒரு பெரும் வடிகாலாக அமைந்தது. தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை அப்படியே ஏற்று, வழங்கப்பட்ட அரசுப் பணியைத் தமிழக அரசு திரும்பப் பெற்றால், அக்குடும்பங்கள் மீண்டும் மீள முடியாத துயரத்திற்கும் வாழ்வாதாரப் பாதிப்பிற்கும் தள்ளப்படுவார்கள்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பாதிக்கப்பட்டக் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், அக்குடும்பங்களின் அரசுப் பணியைத் தொடர்ந்து உறுதிப்படுத்தத் தேவையான அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசைத் திட்டவட்டமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement