Advertisement

“வதந்திகளை நம்ப வேண்டாம்” – மருத்துவ கலந்தாய்வு நடைமுறைகள் குறித்துத் தமிழக அரசு அறிவிப்பு!

மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவான எம்பிபிஎஸ்/பிடிஎஸ் சேர்க்கைக்கான விதிகளில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான விதிகளும் மாற்றப்படுமா என்ற சந்தேகம் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பரவலாக எழுந்தது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில், தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெளிவான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதோடு, பழைய நடைமுறைகளே தொடரும் என உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு: தமிழ்நாட்டில் வழக்கம்போல் ஒருங்கிணைந்த இணையவழி நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்படும். விண்ணப்பப் பதிவின் போது மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் சான்றிதழ்கள் அனைத்தும் இணையவழியிலேயே ஆய்வு செய்யப்படும்.

Advertisement

அசல் சான்றிதழ்கள் நேரடிச் சரிபார்ப்பு: கலந்தாய்வு முடிந்து இட ஒதுக்கீடு பெற்ற பின்னர், மாணவர்கள் கல்லூரியில் சேரும் தருணத்தில் மட்டுமே அவர்களது அசல் சான்றிதழ்கள் நேரடியாகச் சரிபார்க்கப்படும்.

இடங்களை நிராகரிக்கும் முறை: கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற மருத்துவ அல்லது பல் மருத்துவ இடங்களில் சேர விருப்பமில்லாத மாணவர்கள், அதற்கான நிராகரிப்பு விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான TN Medical Selection வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். நேரில் வழங்கப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Advertisement

இடங்கள் மாற்றிக்கொள்ளும் வசதி: முதல் சுற்றில் பங்கேற்று இடம் பெற்ற மாணவர்கள், அடுத்தடுத்த சுற்றுகளில் இடங்களை மாற்றிக் கொள்வதற்கான (Upgradation) நடைமுறை வழக்கம்போல் தொடரும். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மாநிலத் தகவல் குறிப்பேட்டில் தெளிவாக இடம்பெற்றுள்ளன.

ஒதுக்கீட்டு இடங்கள்: அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) ஆகிய அனைத்துப் பிரிவினருக்கான இடங்களும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளின்படியே நிரப்பப்படும்.

மருத்துவக் கலந்தாய்வு பற்றிய அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் மாணவர் சேர்க்கைக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்பதால், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளையும் போலித் தகவல்களையும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மாணவர் சேர்க்கைக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement