இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சமையல் எரிவாயு (LPG) இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்கும் மின்-கேஒய்சி (e-KYC) பணிகளை விரைந்து முடிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
போலி இணைப்புகளைக் கண்டறியவும், சமையல் எரிவாயு இணைப்பு உண்மையான பயனாளிக்குத்தான் சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும் இந்த e-KYC சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாகச் சென்று, தங்களது கைவிரல் ரேகை (Fingerprint), கண் கருவிழி (Iris) அல்லது முகத்தைப் பதிவு செய்து ஆதார் வாயிலாக உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
ஏற்கனவே இந்த இ-கேஒய்சி பணியை முடிப்பதற்குப் பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதிலும், பல வாடிக்கையாளர்கள் இன்னும் தங்களது கேஒய்சி சரிபார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் உள்ளனர். இதனால், வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் இந்தப் பணியை முழுமையாக முடித்து ஆக வேண்டும் என்று மத்திய அரசு இறுதி கெடு விதித்துள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி சமர்ப்பிக்கத் தவறும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கேஸ் மானியம் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், மேலும் அவர்கள் புதிய சிலிண்டர் முன்பதிவு செய்வதில் முடக்கம் போன்ற பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே, இதுவரை கேஒய்சி சமர்ப்பிக்காத வாடிக்கையாளர்கள் உடனடியாகத் தங்களின் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சியைத் தொடர்புகொண்டு இ-கேஒய்சி பணியை முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












