Advertisement

சிறுங்குன்றம் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு – திருப்போரூர் இணைப்பு சாலையாக விளங்கும் சிறுங்குன்றம் சாலை கடுமையாக சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள சிறுங்குன்றம் பகுதியில் தொடங்கி சுமார் 3 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ள இந்த சாலை, செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.

Advertisement

ஆனால், சாலையின் சுமார் அரை கிலோமீட்டர் பகுதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சறுக்கி விழுந்து காயமடையும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், சாலையில் சிதறிக்கிடக்கும் கற்களால் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகும் நிலையும் உருவாகியுள்ளது.

அனுமந்தபுரம், சிறுங்குன்றம், பெருந்தண்டலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். சாலை சேதம் காரணமாக வேலைக்கு செல்லும் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Advertisement

மேலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களும் சாலையின் மோசமான நிலை காரணமாக தாமதமாகச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்தை சீராக்கவும் சிறுங்குன்றம் சாலையை உடனடியாக புதுப்பித்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement