செங்கல்பட்டு மாவட்டம் மேலவலம்பேட்டையில் மத்திய அரசின் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட மாவட்ட விதை சுத்திகரிப்பு நிலையம் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதுடன், விதை தயாரிப்பு திறனும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திருக்கழுக்குன்றம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் செயல்பட்டு வரும் வட்டார விதை சுத்திகரிப்பு நிலையங்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு 500 கிலோ நெல் விதைகளை மட்டுமே சுத்திகரிக்கும் திறன் கொண்டவை. மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகை விதைகளின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், புதிய மாவட்ட விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து 2023-24 நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டு, 2024ஆம் ஆண்டு மேலவலம்பேட்டையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. ஏழு மாதங்களுக்கு முன்பு புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் ஒரு நாளைக்கு 10,000 கிலோ விதைகளை சுத்திகரிக்க முடியும் என்று வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணிகள் நிறைவடைந்து சம்பந்தப்பட்ட துறைகள் முறையாக ஒப்படைத்ததும் முதல்வர் திறந்து வைப்பார் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில், விவசாயிகள் நிலையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.












