என்.ஜி.ஜி.ஓ நகரில் சமுதாய நலக்கூடப் பணி மந்தம்; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

0
1

செங்கல்பட்டு அருகே மேலமையூர் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ நகரில் ரூ.96 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடப் பணி 11 மாதங்களாகியும் நிறைவடையாததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் திருமணம் மற்றும் குடும்ப விழாக்களை நடத்த தனி வசதி இல்லாததால், பொதுமக்கள் நீண்ட காலமாக சமுதாய நலக்கூடம் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து 2024-25 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.96 லட்சம் ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆறு மாதங்களில் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், இன்னும் கட்டுமானம் முழுமையாக நிறைவடையவில்லை.

இதனால், சமூக நிகழ்ச்சிகளுக்கான அடிப்படை வசதி இன்றி மக்கள் தொடர்ந்து சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, சமுதாய நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.