Advertisement

சிங்கபெருமாள் கோவிலில் மீண்டும் ஆக்கிரமிப்புகள்; போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தின் வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதிகளில் ஒன்றாக சிங்கபெருமாள் கோவில் திகழ்கிறது. மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, ஒரகடம் உள்ளிட்ட தொழிற்பகுதிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இப்பகுதியை தினமும் பயன்படுத்துகின்றனர். மேலும், திருக்கச்சூர், கொளத்தூர், ஆப்பூர், செட்டிப்புண்ணியம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சாலையில் மெல்ரோசாபுரம் முதல் பகத்சிங் நகர் வரை மற்றும் அனுமந்தபுரம் சாலையில் செங்குன்றம் சந்திப்பு வரை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாலையோரங்களில் கார்கள், ஆட்டோக்கள், தனியார் தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதேபோல், கடைகளின் விளம்பர பலகைகள் மற்றும் தற்காலிக அமைப்புகளும் சாலையின் அகலத்தை குறைத்து வருகின்றன.

Advertisement

இதன் விளைவாக, அதிக போக்குவரத்து நேரங்களில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதுடன், பாதசாரிகளும் பாதுகாப்பற்ற சூழலில் சாலையை கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றியிருந்தனர். ஆனால் சில வாரங்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நிரந்தர நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement