செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பெரிய ஏரியில் இருந்த பல ஆண்டுகள் பழமையான கருவேல மரங்கள் மர்ம நபர்களால் வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மர்ம நபர்கள் ஏரிக்குள் இருந்த கருவேல மரங்களை வெட்டி எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது அனுமதியோ இன்றி இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிப் பகுதியில் உள்ள மரங்களை வெட்ட யார் அனுமதி வழங்கினர் என்பது தெரியவில்லை. சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டிருப்பதால் இதன் பின்னணியில் மர வியாபாரிகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு மற்றும் ஏரிப் பகுதிகளில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மரங்களை வெட்டிச் சென்ற நபர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.













