Advertisement

அரசு பள்ளியில் கழிவறை அவலம்: பொதுவெளியில் இயற்கை உபாதை கழிக்கும் மாணவிகள்!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிவறை வசதிகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளதால், அங்கு பயிலும் மாணவ-மாணவிகள் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் தினந்தோறும் கடும் சித்ரவதையை அனுபவித்து வரும் அவல நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை மேம்படுத்த முக்கியக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சூழலில், இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் குறிப்பாகப் பள்ளி மாணவிகள் போதிய கழிவறை வசதி இல்லாததால் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள கழிப்பறைகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாமல் முற்றிலும் சேதமடைந்து, அசுத்தத்தின் உச்சமாய் பயன்படுத்தவே முடியாத அவல நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக வேறு வழியின்றி, மாணவ-மாணவிகள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காகப் பள்ளி வளாகத்திற்கு வெளியே உள்ள பொதுவெளியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். வளர் இளம் பருவத்து மாணவிகள் இதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் கூச்சத்திற்கும், பாதுகாப்பற்ற சூழலுக்கும் ஆளாகி தினந்தோறும் கடும் அவதியைச் சந்தித்து வருகின்றனர்.

Advertisement

முறையான துப்புரவுப் பராமரிப்பு இல்லாததால் பள்ளி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் வகுப்பறைகளில் நிம்மதியாக அமர்ந்து மாணவர்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்குப் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் பேராபாயமும் அதிகரித்துள்ளது. மாணவர்களின் நலன் காக்க வேண்டிய பள்ளியே அவர்களின் சுகாதாரத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் மாறியிருப்பது பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக கழிவறைகளிலும் தண்ணீர் வசதி இல்லாததால், அவை எதற்கும் பயன்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவே முடங்கிக் கிடக்கின்றன. பிளளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை நினைத்து நிம்மதியின்றித் தவிக்கும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பள்ளியின் உள்கட்டமைப்பை ஆய்வு செய்து புதிய கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement