Advertisement

சேவை வரியைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் – வணிகர் சங்கம் எச்சரிக்கை

சேவை வரியைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புதிய சங்கங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் விக்ரமராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

GPay பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 0.4 சதவீத சேவை வரியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விக்ரமராஜா வலியுறுத்தினார். இதுதொடர்பாக வரும் 29-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், மத்திய நிதியமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்து முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், அரிசி விலை கிலோ ரூ.100-ஐ எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பல்வேறு வரிகள் விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருப்பதாக தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்களை திருமணம் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், அவற்றை வாடகைக்கு எடுத்து வணிகக் கடைகள் நடத்துவதற்கு வழங்கப்படும் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வணிகர் சங்கம் வலியுறுத்தியது.

பல இடங்களில் திருமண மண்டபங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், அந்தந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் விக்ரமராஜா தெரிவித்தார். இதனை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து காவல்துறை தொடர்பாக பேசிய அவர், ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சில காவல்துறை அதிகாரிகள் வியாபாரிகளை கண்காணிப்பது போன்று செயல்படுவதாக குற்றம்சாட்டினார். கடை கடையாகச் சென்று ஆய்வு செய்வதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகளில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், சில அதிகாரிகள் கையூட்டு பெறுவதற்காக வியாபாரிகளைப் பயன்படுத்துவதாக கூறப்படும் சம்பவங்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் விக்ரமராஜா தெரிவித்தார்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் காலங்களில் வியாபாரத்திற்கான பொருட்கள் அல்லது பணத்தை எடுத்துச் செல்லும் வியாபாரிகளிடம் அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதால் அவர்கள் பாதிக்கப்படுவதாகவும் வணிகர் சங்கம் தெரிவித்தது. ஏற்கெனவே தேர்தல் காலங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக வியாபாரிகள் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், மீண்டும் இடைத்தேர்தல் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் தேர்தல் செலவுகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால், நடவடிக்கை தேவைப்பட்டால் அரசியல் கட்சிகளின் செலவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வியாபாரிகள் தங்களது தொழில் தொடர்பாக பணம் எடுத்துச் செல்வதைத் தடுத்து நிறுத்தக் கூடாது என்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

#சேவைவரி #வணிகர்சங்கம் #விக்ரமராஜா #GPay #வணிகர்கள் #திருமணமண்டபம் #வணிகக்கடை #காவல்துறை #விலைவாசிஉயர்வு #அரிசிவிலை #இடைத்தேர்தல் #வணிகர்கள்போராட்டம் #ServiceTax #TradersAssociation #VikramRaja #GPay #Traders #MarriageHall #CommercialShops #Police #PriceRise #RicePrice #ByElection #TradersProtest

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement