நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெருவிழா தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் விமர்சையாகத் தொடங்கியது.
நாகப்பட்டினம் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற கீழை நாடுகளின் லூர்து நகர் என்று போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழப் புனிதக் கொடியேற்றத்துடன் மிக விமர்சையாகவும் பக்திப் பரவசத்துடனும் தொடங்கியது.
ஆரோக்கிய அன்னையின் பிறந்த தினமான செப்டம்பர் 8-ஆம் தேதியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பெருவிழாவையொட்டி, பேராலய கொடிமரத்தில் ஏற்றப்படவுள்ள ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறித்த வண்ணக் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலிகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு, புனித நீர் தெளித்துத் திருக்கொடி முறைப்படி புனிதம் செய்யப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டது.
கொடியேற்ற நிகழ்வின்போது பேராலய வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, “மரியே வாழ்க… மரியே வாழ்க!” என ஒருமித்த குரலில் முழக்கமிட்டு அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர். விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.












