தொலைந்த சிம்கார்டுக்கு புதிய சிம் வழங்க ரூ.650 வசூலித்த ஏர்டெல் முகவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வாடிக்கையாளருக்கு ரூ.40,000 வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
📱 டூப்ளிகேட் சிம்முக்கு ரூ.650 வசூல்
செங்கல்பட்டில் வசிக்கும் சரிதா என்பவர் கடந்த 21.09.2025 அன்று தனது செல்போனை தவறவிட்டுள்ளார். இதையடுத்து மறுநாள் செங்கல்பட்டில் உள்ள மணி மார்க்கெட்டிங் என்ற ஏர்டெல் நிறுவன ஷோரூமில் தொலைந்த சிம்கார்டுக்கு பதிலாக புதிய சிம் பெற விண்ணப்பித்துள்ளார். அந்த சிம் அவரது தந்தை காந்தி பெயரில் இருந்த நிலையில், சிம்மை மாற்றி வழங்க ரூ.650 கட்டணம் செலுத்த வேண்டும் என ஷோரூம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சரிதா தனது கணவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஜிபே மூலம் ரூ.650 செலுத்தியுள்ளார். ஆனால், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர் முறையிட்டபோதும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றும், ரசீது கேட்டும் உடனடியாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
💳 ஏர்டெல் நிறுவனத்திடம் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது
சுமார் 17 நாட்களுக்குப் பிறகு கட்டணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதிய சிம் பெறுவதற்கான கட்டண விவரம் குறித்து சரிதாவின் கணவரும் வழக்கறிஞருமான ஜெயவேல், ஏர்டெல் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு ஏர்டெல் நிறுவனம் அளித்த பதிலில், டூப்ளிகேட் சிம்கார்டுக்கு ரூ.50 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், பெயர் மாற்றத்திற்கு எந்தக் கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரூ.650 வசூலிக்கப்பட்டதில் ரூ.600 அதிகமாக வசூலிக்கப்பட்டதாகக் கூறி, ஏர்டெல் முகவரான மணி மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் மணிகண்டனுக்கு எதிராக சரிதா செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
⚖️ ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், வாடிக்கையாளரிடம் அதிகமாக வசூலிக்கப்பட்ட ரூ.600 தொகையை 22.09.2025 முதல் 24 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டது. மேலும், சேவைக் குறைபாடு, மன உளைச்சல் மற்றும் நேர இழப்பை ஏற்படுத்தியதற்காக ரூ.25,000 நிவாரணமும், வழக்கு செலவுக்காக ரூ.15,000-மும் வழங்க உத்தரவிடப்பட்டது. இதன்படி மொத்தம் ரூ.40,000 இழப்பீடாக வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் காசிபாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












