சட்டசபைத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.5 கோடி பெற்று ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அதிமுக வேட்பாளர் தனவிமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி பெற்றுக் கொண்டு, அதில் ரூ.4 கோடியைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன் மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தனவிமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தேன். அப்போது புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் செலவுகளைச் செய்யும் தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி தரும்படி வலியுறுத்தினார். வேட்பாளர் பட்டியல் வெளியானதும் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக அவர் உறுதியளித்தார். அவரது வழிகாட்டுதலின்படி ரூ.4 கோடியே 50 லட்சத்தைத் திரட்டி, விஜயபாஸ்கர் குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைத்தேன்.
பின்னர் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கப்பட்டதும் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, வெறும் ரூ.50 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.4 கோடியைத் தராமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்தார். அண்மையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் கட்சியில் இணைந்த சூழலில், நிலுவையில் உள்ள ரூ.4 கோடியைத் திருப்பித் தருமாறு கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நீதிமன்றம் தலையிட்டு சி.விஜயபாஸ்கர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் மீது பல கோடி ரூபாய் மோசடிப் புகார் கிளம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.













