நேபாள வெள்ளப் பேரிடருக்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளுக்கு ₹47,500 கோடி வரை தேவைப்படலாம் என நேபாள நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உருக்குலைந்துள்ள பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், பேரிடருக்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் சுமார் 47,500 கோடி ரூபாய் (சுமார் 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வரை தேவைப்படலாம் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் வடக்கு எல்லைப் பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு காரணமாகத் தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், குடியிருப்புகள், நீர்மின் நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் பணிகளில் நேபாள அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே, “நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி சுமார் 38,000 கோடி முதல் 47,500 கோடி ரூபாய் வரை தேவைப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சேதமடைந்த அனைத்துப் பகுதிகளிலும் முழுமையான கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், கள ஆய்வின் இறுதி முடிவில் இந்தத் தொகை மேலும் மாறுபட வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இமாலயப் பேரிடரில் இருந்து மீண்டு வர உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளின் நிதியுதவியையும் மறுசீரமைப்புப் பங்களிப்பையும் நேபாள அரசு கோரியுள்ளது.












