மதுராந்தகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றிகளைப் (Transformer) பிரித்து, அதிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் திருடி வந்த 2 நபர்களையும், அந்தத் திருட்டுப் பொருட்களை வாங்கி விற்ற பழைய இரும்புக்கடை உரிமையாளரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சித்தாமூர், செய்யூர், படாளம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே, விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருந்த மின்மாற்றிகள் மர்ம நபர்களால் இரவு நேரத்தில் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காப்பர் கம்பிகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்த நிலையில், காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சித்தாமூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் காப்பர் ஒயர்களை எடைக் போடுவதற்காகக் கொண்டு வந்த விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நத்தம்பேடு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (20) மற்றும் பிரகாஷ் (30) ஆகிய இருவரைப் பிடித்துச் சித்தாமூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், சந்தேகமடைந்த போலிசார் தங்களது பாணியில் விசாரித்த போது அவர்கள் மின்மாற்றி காப்பர் கம்பிகளைத் திருடியதை ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மதுராந்தகம், சித்தாமூர், படாளம், செய்யூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாய மின்மாற்றிகளை உடைத்துக் காப்பர் கம்பிகளைத் திருடியது அம்பலமானது. மேலும், இவர்கள் திருடிய காப்பர் கம்பிகளைத் தொடர்ந்து வாங்கி வந்த பழைய இரும்புக்கடை (காயலான் கடை) உரிமையாளரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள இக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.













