இந்திய மொபைல் போன் பயனர்களுக்குப் பிரத்யேகமான மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அனுபவத்தை வழங்கும் நோக்கில், இந்தியாவின் சாம்சங் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D) மையக் குழுக்கள் அதிநவீன AI வசதிகளை உருவாக்கி வருவதாகச் சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி வகிக்கும் சாம்சங் நிறுவனம், இந்தியப் பயனர்களின் தேவைகள் மற்றும் மொழிப் பயன்பாட்டை மையமாகக் கொண்டு தனது தொழில்நுட்பங்களை மாற்றி அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள சாம்சங் ஆராய்ச்சி மையப் பொறியாளர்கள், இந்திய மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற பிரத்யேக AI அம்சங்களை வடிவமைக்கும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்துச் சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “எதிர்வரும் சாம்சங் ‘கேலக்ஸி’ (Galaxy) ரக ஸ்மார்ட்போன்களில் பல மொழிகளை உணர்ந்து செயல்படும் ‘Multilingual AI’ வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாகத் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்தியப் பிராந்திய மொழிகளின் பயன்பாடு, உள்ளூர் மொழியியல் நுணுக்கங்கள் மற்றும் இந்தியப் பயனர்களின் தனித்துவமான தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த புதிய AI அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளது.
இந்திய மொழிகளில் இயங்கும் இந்த அதிநவீன AI தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் அறிமுகமாகும் போது, பயனர்களின் அன்றாட டிஜிட்டல் அனுபவம் மேலும் எளிமையாகவும் விரைவாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியச் சந்தையைக் இலக்காகக் கொண்டு சாம்சங் நிறுவனம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி, இந்தியச் தொழில்நுட்பப் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












