Advertisement

“ரூ.32 கோடி லபக்!” – டாஸ்மாக் பார் டெண்டர் ஊழலில் பாய்ந்தது எஃப்.ஐ.ஆர்; செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

டாஸ்மாக் பார் டெண்டர் ஒதுக்கீட்டில் விதிகளைப் புறந்தள்ளி ‘கட்சி நிதி’ என்ற பெயரில் மிரட்டி முறைகேடாகப் பணம் வசூலித்து அரசு கஜானாவுக்கு ரூ.32 கோடி அளவிற்குப் பெருத்த வருவாய் இழப்பை ஏற்படுத்திய விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநர் எஸ். விசாகன் ஐஏஎஸ் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் சென்னை, கரூர், கோவை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சுழல் சோதனையின் தொடர்ச்சியாக, மாலையில் இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) விவரங்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளன. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, விதிகளைத் தவிடுபொடியாக்கி, டாஸ்மாக் பார் டெண்டர்களைத் தனக்கு வேண்டிய கரூர் கும்பலுக்குச் சாதகமாக ஒதுக்கியதன் மூலம் அரசுக்கு ரூ.32 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக எஃப்.ஐ.ஆரில் புள்ளிவிவரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறை விலாவாரியாகக் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

இந்த மெகா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாகவும் (A1), டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் ஐஏஎஸ் இரண்டாவது குற்றவாளியாகவும் (A2) சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர்கள் டி. ராமதுரை முருகன், ஆர். பன்னீர் செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர், அவரது நிழல் கூட்டாளி ரதேஷ் ராஜ் மற்றும் எஸ். கார்த்திக் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு வலை பாய்ந்துள்ளது. பார் டெண்டர் கோரிய ஒப்பந்ததாரர்களைக் ‘கரூர் கும்பல்’ என்ற பெயரில் இயங்கிய ஆட்களை வைத்துக் மிரட்டி, அதிகாரப்பூர்வமற்ற முறையில் கோடிக்கணக்கில் கட்டாய வசூல் வேட்டை நடத்தியதும், பணம் கொடுக்க மறுத்த அதிகாரிகளையும் ஒப்பந்ததாரர்களையும் பந்தாடியதும் விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த மின்னல் வேக அதிரடி ஆக்ஷனால், டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட பல முக்கியப் புள்ளிகள் மற்றும் அதிகாரி சுறாக்கள் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுச் சிக்கித் தவித்து வருகின்றனர்.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement