மாணவியர் பள்ளி அருகே ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை ரோந்து: ரோமியோக்கள் ஓட்டம்

0
2

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மாணவியர்களை தொந்தரவு செய்து வந்த இளைஞர்கள், ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கழுக்குன்றம் ஓரகடம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் சில இளைஞர்கள் பள்ளி வளாகம் அருகே கூடிவந்து மாணவியர்களை பின்தொடர்வது, கேலி செய்வது, பைக்கில் சாகசம் காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் அச்சமடைந்து வந்தனர். இருப்பினும் பலர் அதிகாரப்பூர்வ புகார் அளிக்க தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை தற்போது பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி நேற்று திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘சிங்கப்பெண்’ போலீசார் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். மாணவியர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களை தவிர, மற்றவர்களை பள்ளி வளாகம் அருகே அனுமதிக்கவில்லை.

பள்ளி முடியும் நேரத்தில் வழக்கம்போல் அப்பகுதிக்கு வந்த சில இளைஞர்கள், போலீசாரின் கண்காணிப்பை கண்டதும் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.