செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கோடை வெயில் தீவிரமாக இருக்கும் சூழலில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூக்கமின்றி தவித்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், மின்வெட்டு பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி திமுக நகர செயலாளர் எம்.கே.டி. கார்த்திக், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலனிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் மாணவர்கள் படிப்பிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோடை காலத்தில் மின்விசிறி மற்றும் குடிநீர் மோட்டார் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியான மின்வெட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலையான மின்விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் மின்வெட்டு தொடர்பான புகார்களை எளிதாக பதிவு செய்யும் வகையில் மின்வாரியம் சார்பில் உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மின்தடை ஏற்பட்டால், EB அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே 94987 94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்தவுடன் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





