Advertisement

இந்தியாவின் விண்வெளிப் புரட்சி.. தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ‘விக்ரம்-1’ ராக்கெட் விண்ணில் பாய்ந்து வரலாற்றுச் சாதனை!

இந்திய விண்வெளி வரலாற்றில் என்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டுள்ளது. முழுமையாக இந்தியத் தனியாரால் வடிவமைக்கப்பட்டு, உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ (Vikram-1), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து (SDSC) இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. “ஆகமான்” (Aagaman) என்று பெயரிடப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனைப் பயணம், நிர்ணயிக்கப்பட்ட 450 கிலோமீட்டர் உயர தாழ்வட்ட சுற்றுப்பாதையைத் (LEO) துல்லியமாக எட்டி விண்வெளிப் பந்தயத்தில் இந்திய முத்திரையைப் பதித்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த விண்வெளித் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ (Skyroot Aerospace) இந்த விக்ரம்-1 ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. முன்னதாக இன்று காலை 11.30 மணிக்கு ஏவப்பட வேண்டிய இந்த ராக்கெட், ஆட்டோமேட்டிக் லான்ச் சீக்வென்ஸ் மென்பொருளில் (Software) ஏற்பட்ட ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டது. எனினும், கோளாறு உடனடியாகக் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மதியம் 12 மணி 5 நிமிடம் 30வது வினாடியில் நெருப்பைக் கக்கிக்கொண்டு ராக்கெட் விண்ணோக்கிப் பாய்ந்தது. புறப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில், அது சுமந்து சென்ற கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ் உள்ளிட்ட நிறுவனங்களின் 350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை அதனதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த ராக்கெட்டின் பே-லோடுடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸ் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக வைரக்கல்லும், இந்தியாவின் விண்வெளி முன்னோடிகளான விக்ரம் சாராபாய், சர் சி.வி.ராமன் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரின் சிறிய தங்கச் சிற்பங்களும் விண்வெளிக்குச் சுமந்து செல்லப்பட்டது கூடுதல் சிறப்பம்சமாகும்.

Advertisement

இந்த விக்ரம்-1 ராக்கெட், உலகிலேயே முழுவதும் உலோகத்தைத் தவிர்த்து கார்பன் கலவைப் பொருட்களால் (Carbon Composites) தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இதனால் வழக்கமான ராக்கெட்டுகளின் எடையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த 3 கட்ட ராக்கெட்டில் முதல்முறையாக அதிநவீன 3டி முறையில் அச்சிடப்பட்ட (3D-printed) என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அசாத்திய வெற்றியைத் தொடர்ந்து, டெல்லியிலிருந்து கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்கைரூட் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வெற்றிக்குப் பின் பேசிய ஸ்கைரூட் நிறுவனர்களில் ஒருவரான பரத், “இது 20-20 மேட்ச் கிடையாது, டெஸ்ட் மேட்ச் போன்றது. ராக்கெட் சயின்ஸ் எவ்வளவு சவாலானது என்பதை உணர்வுப்பூர்வமாகப் பார்த்துள்ளோம். எங்களது அடுத்த இலக்கு 2030-க்குள் 50 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதே. சர்வதேச அளவில் ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனம் எங்களது ஊக்கசக்தி, அதே நிலைக்கு நாங்களும் வளர்வோம்” என்றார். மற்றொரு நிறுவனர் பவன்குமார் சந்தானா பேசுகையில், தங்களது நிறுவன ஊழியர்களின் சராசரி வயது 28 தான் என்றும், இளைஞர் பட்டாளத்தின் கூட்டு உழைப்பால் ராக்கெட், செயற்கைக்கோள், ஆர்பிட்டல் வெஹிக்கிள் ஆகிய மூன்றையும் வெற்றிகரமாகச் சாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Advertisement

தொடர்ந்து ‘சன் நியூஸ்’ ஊடகத்திற்குப் பிரத்யேகப் பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், “இன்றைய நாள் இஸ்ரோ வரலாற்றில் மிக முக்கியமானது. விண்வெளித்துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்ட 6 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்கள் உருவாகியுள்ளன. லான்ச் வெஹிக்கிள் என்பது மிகவும் ட்ரிக்கியான விளையாட்டு. இந்த நிதியாண்டில் மேலும் 7 ராக்கெட்டுகளை ஏவத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் அடுத்த ஏவுதல் இருக்கும். அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஏவுதளப் பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிவடைந்து, அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும்” என்று அதிரடித் தகவலை வெளியிட்டார். இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் குமார் கோயங்காவும் இந்த வரலாற்று வெற்றியை விண்வெளித் துறையின் புதிய விடியல் எனப் பாராட்டியுள்ளார்.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement