Advertisement

பரனூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்! வேலையைப் பறித்த புதிய சிஸ்டம்!

பரனூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய தடையற்ற சுங்கக் கட்டண முறை அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் ஊழியர்கள், மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

புதிய சுங்கக் கட்டண முறை… ஊழியர்களுக்கு வேலை இழப்பு?

செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்தச் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக 140-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்திலேயே முதல் முறையாக ‘மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ’ (Multi Lane Free Flow) எனப்படும் வாகனங்கள் நிற்காமல் சுங்கக் கட்டணம் செலுத்தும் புதிய முறை கடந்த 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய முறை அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement

20 ஆண்டுகள் உழைத்தும் வேலை இல்லை… ஊழியர்கள் போராட்டம்!

இந்தப் பணிநீக்கத்தைக் கண்டித்து, பரனூர் சுங்கச்சாவடி அருகே இன்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்தோம். தற்போது எங்களில் 80-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். இதனால் எங்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட உள்ளூர் ஊழியர்களுக்குப் பதிலாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புதிதாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சுங்கச்சாவடி நிர்வாகம் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

கோரிக்கை நிறைவேறாவிட்டால் தற்கொலை செய்வோம் என எச்சரிக்கை

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாகப் பணியாற்றிய ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சுங்கச்சாவடி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகத்தின் விளக்கம் வெளியாகவில்லை.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement