போக்குவரத்து காவல் ஆய்வாளர் இல்லாததால், முக்கிய சாலைகளில் நெரிசலை கட்டுப்படுத்துவதில் போலீசார் சிரமப்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
🚦 நெரிசலில் சிக்கித் தவிக்கும் மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி, சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. செய்யூர், சித்தாமூர், சூனாம்பேடு, கிழக்கு கடற்கரை சாலை, மதுராந்தகம்–திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலை, உத்திரமேரூர்–மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான வழித்தடமாகவும் உள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலையில், மதுராந்தகம் நகரின் முக்கிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
🚔 ஆய்வாளர் பணியிடம் ஓராண்டாக காலி
மதுராந்தகம் டவுன், பஜார் வீதி, தேரடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண நாட்களிலேயே வாகன நெரிசல் காணப்படுகிறது. மேலும், பண்டிகை காலங்கள், விசேஷ நாட்கள், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் நேரங்களில் நெரிசல் பல மடங்கு அதிகரிக்கிறது. இந்நிலையில், மதுராந்தகம் வட்டார போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது. இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதிலும், நெரிசலை சீரமைப்பதிலும் போக்குவரத்து போலீசார் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதால், மற்ற காவல் பணிகளிலும் கவனம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
⚠️ உடனடியாக அதிகாரியை நியமிக்க கோரிக்கை
முக்கிய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் மதுராந்தகம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்கும், விபத்துகளை தடுப்பதற்கும் போதிய அளவில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்க வேண்டியது அவசியம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடம் நீண்ட காலமாக காலியாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மதுராந்தகத்தில் காலியாக உள்ள போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்பி, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












