Advertisement

சென்னை முதலைப் பண்ணையில் மாதம் ஒருநாள் இலவச அனுமதி!

மாமல்லபுரம் அருகே உள்ள சென்னை முதலைப் பண்ணையில், 2027 ஆகஸ்ட் வரை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது.

🐊 மாதம் ஒரு நாள் இலவச அனுமதி
மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில் மெட்ராஸ் க்ரோக்கடைல்ஸ் பேங்க் டிரஸ்ட் மற்றும் சென்டர் பார் ஹெர்படாலஜி இணைந்து சென்னை முதலைப் பண்ணையை நடத்தி வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ரோமுலஸ் விட்டேகர் மற்றும் ஜாய் விட்டேகர் ஆகியோர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பின்னர், ஊர்வன உயிரினங்கள் குறித்த ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக இந்த முதலைப் பண்ணையை தொடங்கினர். இங்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரிய வகை முதலைகள், பாம்புகள், ஆமைகள், பல்லிகள், ஓணான்கள் உள்ளிட்ட ஏராளமான ஊர்வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

🎟️ 2027 ஆகஸ்ட் வரை வாய்ப்பு
சென்னை முதலைப் பண்ணைக்கு வரும் சுற்றுலா பயணியர்களிடம் தற்போது பெரியவர்களுக்கு ரூ.110, சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், முதலைப் பண்ணையின் 50-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பார்வையாளர்களுக்கு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இன்று முதல் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை மட்டும் சுற்றுலா பயணியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முதலைப் பண்ணையை இலவசமாக பார்வையிடலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், குடும்பத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகள் அரிய ஊர்வன உயிரினங்களை கட்டணமின்றி நேரில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

🌿 ஊர்வன பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்
இதனிடையே, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதலைப் பண்ணை நிர்வாகம் மற்றும் தி ரெப்டைல் கன்சர்வன்சி அலையன்ஸ் நிறுவனம் இணைந்து விழிப்புணர்வு பயணத்தையும் நேற்று தொடங்கின. இந்தப் பயணத்தின் மூலம் நாடு முழுவதும் 22 மாநிலங்களில் சுமார் 15 ஆயிரம் கி.மீ. பயணம் மேற்கொண்டு, வரும் டிசம்பர் மாதம் வரை ஊர்வன உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரிய வகை ஊர்வன உயிரினங்களை பாதுகாப்பது, அவற்றின் வாழ்விடங்களை காப்பது மற்றும் மனிதர்கள்–ஊர்வன உயிரினங்கள் இடையிலான இணக்கமான சூழலை உருவாக்குவது குறித்து இந்த விழிப்புணர்வு பயணத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement