Advertisement

ரூ.500 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் புனரமைப்பு: தொடங்கி வைத்த அமைச்சர் ஆனந்த்!

செங்கல்பட்டு நெடுங்குன்றம் ஊராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புத்தூர் ஏரி கால்வாய் புனரமைக்கும் பணியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்.

விவசாயப் பாசன வசதியை மேம்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் தமிழகம் முழுவதும் ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஏரி, குளங்கள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களைப் புனரமைக்கும் மாபெரும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள புத்தூர் ஏரி கால்வாய் புனரமைப்புப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் முறைப்படி தொடங்கி வைத்தார்.

Advertisement

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள் மற்றும் பாசன வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரிச் சீரமைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 குளங்கள், ஊரணிகளைப் புனரமைக்கும் விரிவான திட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 2026-2027 நிதியாண்டில் ‘வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின்’ கீழ் ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் 52 புதிய குளங்களை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுமார் ரூ.20 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் 447 நீர்வரத்துக் கால்வாய்களை விரிவாக்கம் செய்து புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

இதன் தொடக்கமாக, வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட புத்தூர் கிராம ஏரி நீர்வரத்துக் கால்வாயை ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணியை அமைச்சர் என். ஆனந்த் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்தச் சிறப்பு நிகழ்வில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன், சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement