மறைமலைநகர் பாரத் பெட்ரோல் பங்கிற்குள் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபருக்குப் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பெட்ரோல் பங்கிற்குள் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைமலைநகர் பகுதியில் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி இயங்கி வரும் பாரத் பெட்ரோல் பங்கிற்குள் TN 16 T 1977 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று திடீரென அசுர வேகத்தில் கட்டுப்பாடின்றி உள்ளே புகுந்தது. காரை ஓட்டி வந்த வாலிபர் அதிகப்படியான மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. போதையின் உச்சத்தில் வாகனத்தைத் தனது கட்டுப்பாட்டில் இயக்க முடியாமல் தவித்த அவர், பெட்ரோல் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்த மற்றொரு கார் மீதும், பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் மீதும் பலமாக மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
மேலும், அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மீது மோதும் வகையில் கார் தாறுமாறாகச் சீறிப் பாய்ந்ததால், அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடி உயிர் தப்பினர். தொடர்ந்து கண்மூடித்தனமாக ஓடிய கார், இறுதியில் அங்குள்ள காற்று பிடிக்கும் மையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சென்டர் மீடியன் மீது பலமாக மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி பலத்த சேதமடைந்தது.
பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து பொதுமக்களின் உயிரோடு விளையாடும் வகையில் அராஜகத்தில் ஈடுபட்டதைக் கண்டு ஆத்திரமடைந்த அக்கம் பக்கத்தினரும் வாகன ஓட்டிகளும் காரைச் சுற்றி வளைத்தனர். போதையில் நிலைதடுமாறி காரை விட்டு இறங்க முடியாமல் இருந்த அந்த வாலிபரை வெளியே இழுத்துப் பொதுமக்கள் சரமாரியாகத் தர்மஅடி கொடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்குப் பொதுமக்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், தகவல் தெரிவித்து நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்குக் காவல்துறையினரோ அல்லது ரோந்துப் பிரிவு வாகனங்களோ வரவில்லை எனக் கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த தேசிய நெடுஞ்சாலைப் பெட்ரோல் பங்கில் இவ்வளவு பெரிய பதற்றமான சூழல் நிலவியபோதும், காவல்துறையினர் உரிய நேரத்தில் வராமல் மெத்தனமாகச் செயல்பட்டது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












