Advertisement

ஜிஎஸ்டி சாலையில் அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய 25 பயணிகள்!

செங்கல்பட்டு புலிப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் பிரேக் பிடிக்காமல் அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, பிரேக் செயலிழந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் (SETC) பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. நள்ளிரவைக் கடந்து அதிகாலை வேளையில் பேருந்து செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை, புலிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரெனப் பேருந்தின் பிரேக் பிடிக்காமல் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் முழு கட்டுப்பாட்டையும் இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி, சாலையின் நடுவே நிலைதடுமாறித் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து கவிழ்ந்த சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சக வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் படையினர், பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை விரைந்து மீட்டனர். நல்வாய்ப்பாகப் பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகளும் சிறிய காயங்களுடன் பெரும் உயிர்ச்சேதமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் மாற்றுப் பேருந்து மூலம் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

இந்த விபத்தின் காரணமாகத் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்து கிடந்த பேருந்தை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் செங்கல்பட்டு போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். பிரேக் பிடிக்காமல் அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement