செங்கல்பட்டு அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டிற்குச் சென்ற 12 பேர் படுகாயமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், விசிக மாநாட்டிற்குச் சென்ற 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, சென்னை சவுகார்பேட்டை பகுதியிலிருந்து 25-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் ஒரு தனியார் டூரிஸ்ட் வேனில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற வாகனங்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் டூரிஸ்ட் வேன் பலத்த சேதமடைந்தது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த விசிக தொண்டர்கள் 12-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து கூச்சலிட்டனர். விபத்து குறித்து உடனடியாகத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு அச்சிறுப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அனைவரும் உடனடியாக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையின் நடுவே நின்றதால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீரமைத்தனர்.












