செங்கல்பட்டு அருகே தேனூர் ஏரி புறம்போக்கு நிலத்தில் தனிநபர் தடுப்புச்சுவர் எழுப்ப முயன்றதை எதிர்த்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு அருகே பழமையான ஏரியை ஒட்டியுள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துத் தனிநபர் ஒருவர் தடுப்புச்சுவர் எழுப்ப முயன்றதைக் கண்டித்து, அப்பகுதி கிராம மக்கள் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டரவாக்கம் ஊராட்சி, தேனூர் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான மிகப்பெரிய பொதுப்பணித்துறை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நீரைப் பிரதான ஆதாரமாகக் கொண்டு சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஏரியின் கரையோரம் சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவருக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காலி மனை உள்ளது. அவர் தனது காலி மனைக்குப் பாதுகாப்பு வேலி அமைப்பதாகக் கூறி, ஏரிக்குச் சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலப் பகுதியையும் சேர்த்து ஆக்கிரமித்து, சிமெண்ட் தடுப்புச்சுவர் (காம்பவுண்ட் சுவர்) எழுப்புவதற்காகப் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆழமான பள்ளங்களைத் தோண்டிப் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வந்தார்.
இதுகுறித்த தகவல் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, நீர்நிலைக் குழுத் தலைவர் குட்டி தலைமையில் திரண்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணிகளை அதிரடியாகத் தடுத்து நிறுத்தினர். மழைக் காலங்களில் ஏரியில் நீர் தேங்காமல் வீணாக வடிந்து செல்வதால் ஏற்கனவே பாசனத்திற்குத் தண்ணீர் இன்றி விவசாயம் பொய்த்துப் போகும் சூழல் நிலவுகிறது என்றும், இந்நேரத்தில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்துத் தடுப்புச்சுவர் கட்டினால் நீர்வரத்து முற்றிலும் தடைபட்டு விவசாயம் அடியோடு அழியும் என்றும் கூறி வெங்கட்ராமனிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டதால் கடுமையான பதற்றமான சூழல் நிலவியது.
அப்போது வெங்கட்ராமன் தரப்பில் இது தனது பட்டா நிலம் எனக் கூறி வாதிடப்பட்டதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றிக் கூச்சல் குழப்பம் உருவானது. இதனையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில், வருவாய்த்துறை மூலம் அரசு நில அளவையரை (சர்வேயர்) வரவழைத்து ஏரி எல்லைகளை முழுமையாக அளவீடு செய்து, அது ஏரி புறம்போக்கா அல்லது பட்டா இடமா என்பதை உறுதி செய்யும் வரை தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை முழுமையாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாகத் தேனூர் ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறை அதிகாரிகளும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளனர்.












